Tuesday, April 12, 2005

திரைகடல் தாண்டி (தளும்பல்)

Image hosted by Photobucket.com

தளும்பல்
கட்டுரைகள்
ஆசிரியர் : சு. கி. ஜெயகரன்
பக்கம்:128. விலை:ரூ 60
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
மின்னஞ்சல் : uyirmmai@gmail.com

நூலைப் பற்றி

லெமூரியா எனும் ஆரியப் புனைவு மற்றும் குமரிக்கண்ட கோட்பாடு பற்றியும் காம்பே வளை குடா புராதனச் சிதைவுகள் பேரூர் மண்ணோடுகள் பற்றியும் இந்நூல் கேள்விகளை எழுப்புகிறது. கவிதைகளில் துவங்கி காவியக்காலம் பற்றிய ஆய்வில் முடியும் இத்தொகுப்பு தமிழ் மொழி மற்றும் தமிழ் சார்ந்த கலாச்சாரம் குறித்த ஒரு புதிய பரிமாணத்தைக் காண வழிகோலுகின்றது

ஆசிரியரைப் பற்றி:

சு. கி. ஜெயகரன்
தாராபுரத்தில் 1946இல் பிறந்த சு. கிறிஸ்டோபர் ஜெயகரன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் இங்கிலாந்து, லஃப்பரோ பல்கலைக்கழகத்தின் நிலத்தடி நீர் ஆய்வுத் துறையில் சான்றிதழ் பட்டத்தையும் பெற்றவர். தன்சீனியா அரசின் நிலத்தடிநீர் ஆலோசகராகப் பணியாற்றியுள்ள இவர், காமன்வெல்த் செயலகத்திற்காகச் சியாராலியோனிலும் இதே பணியை ஆற்றியுள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் பாப்புவா நியுகினி முதலிய நாடுகளில் பணியாற்றிவிட்டு ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்காக ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது பணிபுரிகின்றார். ஜப்பானிய மொழியையும், ஆப்பிரிக்க மொழிகளான கிரியோல், ஸ்வாஹிலி ஆகிய மொழிகளையும் அறிந்துள்ள ஜெயகரன், வரலாற்றுக்கு முற்பட்ட தொல்லியல், ஆதிமனிதக் குடியேற்றம், தமிழின வரலாறு முதலிய துறைகளில் ஆர்வம் கொண்டவர். இந்திய, வெளிநாட்டு ஆய்விதழ்களில் இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதற்குமுன் எழுதிய நூல்கள் : மூதாதையரைத் தேடி (1991, கிரியா), குமரி நில நீட்சி (2003, காலச்சுவடு.)

புத்தகத்திலிருந்து:

திரைகடல் தாண்டி

எந்த நாட்டிலும் இல்லாத அளவு மக்கள் பாரத பூமியை விட்டு அக்கரை செல்கின்றனர். எத்தனை கரைகள் உள்ளனவோ, அத்தனை வகை அக்கரைவாழ் இந்தியர்கள் உண்டு. அவர்களுடைய வயது, பால், பட்டம், இதர தகுதி, சென்ற நாடு, செய்யும் வேலை அல்லது வியாபாரம், முதலீடு, சென்றதின் நோக்கம், முதலியனவற்றின் அடிப்படையில் அவர்களைப் பலவாறாகப் பிரிக்கலாம்.

வயதின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால், மிகவும் சிறியவர் கள், அரபுநாடுகளுக்கு ஒட்டகஓட்டிகளாகச் செல்லும், 6, 7 வயது கொண்ட இந்தியச் சிறுவர்கள் ஒட்டகங்கள் விரைந்து ஓட, ஒட்டகஓட்டி எடை குறைந்தவனாக இருப்பது அவசியம் என்பதால் சிறுவர்கள் இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒட்டகங் களில் அமர்த்தி அவற்றின் முதுகுடன் கட்டப்பட்ட சிறுவர்களின் கதறல் கேட்டு மிரண்டு சில சமயங்களில் ஒட்டகங்கள் ஓடுமாம். வறுமைக்கோட்டில் இருந்து தன்னையும் தன்னைச் சார்ந்தவரையும் மீட்க நினைக்கும் தொழிலாளிகள், தாதியர் முதலியோரின் இலக்கு எண்ணெய் வளநாடுகள். சுகவாழ்வு பற்றி கனவு காண்பவர் அதை நனவாக்க பணம்தேடி பாரசீக வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்ய செல்கின்றனர். இவர்களில் பலர் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்; கை நாட்டுக்காரர்கள். இவர்களில் அறுபது சதவீதத்தினர் எண்பதுகளில் பெற்ற மாதவருமானம் ரூபாய் இரண்டாயிரத்தில் இருந்து ரூபாய் ஐந்தாயிரம் வரை. அக்கரையில் இறங்கியவுடன் கடவுச் சீட்டுகளைத் தம்மை வேலைக்கு அமர்த்துபவர் களிடம் கொடுத்துவிட்டு, கொத்தடிமைகளாக வேலைசெய்யும் இவர்களுக்கு, மேலைநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களுக்குக் கிட்டும் சலுகைகள் கிடையாது. வேலையில் பாதுகாப்பும் கிடையாது. மாதாமாதம் ஒப்பந்தம் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழுபவர்கள் பெருவாரியினர். இவர்களின் கடினஉழைப்பின் ஊதியம் இருவழிகளில் இக்கரையை அடைகின்றது. வங்கிகள் மூலம் வருவது ஒரு வழி; இரண்டாவது வழி வங்கியில் கிடைப்பதை விட சற்றே கூடுதலாக கொடுத்து அந்நியச் செலாவணியை இக்கரையில் வாங்கத் தயாராக உள்ளவர்கள் வழி வருவது. இந்தப் பேரத்தில், அக்கரைவாழ் இந்தியனின் வெள்ளைப்பணம் கறுப்பாக, இக்கரைவாழ் இந்தியனின் கறுப்புப் பணம் அந்நியச்செலாவணியாக அல்லது வெள்ளைப் பணமாக மாறுவதும், வருமானவரி ஏய்க்கப்படுவதும் நம் பொருளாதார அமைப்பைப் பிடித்துள்ள பிணிகளாகும்.

இங்கு அவர்கள் வேண்டுமளவு கிடைக்காத பணத்தைத் தேடி, குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட அரபு நாடுகள் செல்கின்றனர். இந்தியத் துணைக்கண்டத்தை வெள்ளையர்கள் ஆண்டபோது, சிந்து, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், கோவா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களிலிருந்து பெருவாரியாக மக்கள் மற்ற காலனிநாடுகளுக்கு உழைக்கச் சென்றனர். இவற்றில் பெரும்பாலோர் கரும்பு, பருத்தித் தோட்டங்களில் வேலை செய்யவும்; கட்டிடம், சாலை, இருப்புப்பாதை அமைக்கும் தொழிலாளர்களாகவும் சென்றனர். சிலர் ஆசிரியர், மருத்துவர், கணக்கர் என்பன போன்ற வேலைகளைச் செய்யவும், பலர் வாணிபம் செய்யவும் சென்றார்கள். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என்றும் கிழக்கே கிரிஸ்மஸ் தீவுகள், ஃபிஜித் தீவுகள் வரையும், மடகாஸ்கர், சேசல்ஸ் மாரிஷியஸ், கிழக்கு மற்றும் மேற்கு, தெற்கு ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் என்றும், மேற்கே பிரிட்டிஷ் கயானா, (தென் அமெரிக்கா) வரையும் சென்றனர். மூன்று, நான்கு தலைமுறைகள் வாழ்ந்துவிட்ட பலர், அந்நாட்டுக் குடிமக்கள் ஆனார்கள். அவற்றில் சிலர் அன்று அந்த நாடுகளை ஆண்ட ஆதிக்கத்தின் (பிரிட்டிஷ், பிரெஞ்ச், டச்சு) குடியுரிமை பெற்றவர்கள். அந்த நாட்டுக் குடிமக்களை விடக் கடினமாக உழைத்த இந்தியர்களை வெள்ளையர்கள், அங்குள்ள நாட்டினரை விட சற்றே உயர்வாக சலுகைகள் கொடுத்து நடத்தினர். இது இந்தியர்கள்பால் உள்ள அன்பால் அல்ல, இனங்களைப் பிரித்தாளும் உத்தியால். மேலும் வெய்யில் சுட்டெரிக்கும் இந்த நாடுகளில், வெள்ளையன் ஒருவன் பருத்திக்காடுகளில் பருத்தி எடுப்பதையோ, கரும்பு தோட்டங்களில் கரும்பு வெட்டுவதையோ நினைத்துக்கூடப் பார்க்காத காலம், அந்தக் காலம். கிடைக்கவே கிடைத்தான் இந்தியன். இவர்களில் மலேரியா, காலரா, பாம்புக்கடி, வைசூரி என்று பல கேடுகளைச் சந்தித்து இறந்துபட்டவர் பலர். காலனியாதிக்கத்தின்போது கீன்யாவில் மொம்பாஸா கடற்கரைப் பட்டினத்திலிருந்து இருப்புப்பாதை போட இந்தியக் கொத்தடிமைகள் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் நூற்றைம்பதிற்கும் மேற்பட்டோர் (ஜிsணீஸ்ஷீ) சாவோ என்னும் வனப்பகுதியில் வேலை செய்யும்போது சிங்கங்களுக்கு இரையாயினர் என்பது வரலாறு. கிழக்கு ஆப்பிரிக்காவில் காடுகளை அழித்து சாலைகள், இருப்புப் பாதைகள் போட்ட தொழிலாளர்கள், அடிப்படைவசதிகள் இல்லாத நிலையில் உழைத்து வேலைகளை முடித்தது ஒரு பிரமிக்கத்தக்க சாதனை.

வெள்ளைக்காரருக்கு கூழைக்கும்பிடு போட்ட ஆப்பிரிக்கா சென்ற இந்தியர்கள், ஆப்பிரிக்கரை தீண்டப்படாதவராகக் கருதினர். இதை இந்தியக் கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு ஒதுங்கி நின்றவர்கள், வெள்ளையர்களும் ஒருநாள் வெளியேறி, ஆப்பிரிக்கர்களின் கையில் ஆட்சிவரும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்காமல், மதில்மேல் பூனைகளாக வாழ்ந்தனர். இரண்டு தலைமுறைகளில் இவர்களுக்கு ஏற்பட்ட மாற்றம் சுவையானது. கிழக்கு ஆப்பிரிக்கா வந்த உழைப்பாளிகள், மக்கட்பெருக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத வளமான பகுதிகளில் தாங்கள் செய்யவந்த வேலை முடிந்த பின்னும், தாய்நாடு திரும்பாமல் தங்கிவிட்டனர். பின்னர் பெட்டிக்கடைகள், இதர சிறு தொழில்கள், கொள்முதல் முதலியனவற்றில் ஈடுபடவும் ஆரம்பித்தனர். அங்குப் போட்டிகள் அதிகம் இல்லாததாலும், அவர்கள் ரத்தத்தில் ஊறிய வியாபார திறமையாலும் தந்திரத்தாலும், அங்கிருந்தவர்களின் மெத்தனத்தாலும் வியாபாரம் செழித்தது. கடினமாக வேலைசெய்து வியாபாரத்தைப் பெருக்கியது மட்டுமின்றி, ஆப்பிரிக்க மக்களை உபயோகித்தும், ஏய்த்தும் பணத்தைப் பெருக்கியதும் மறுக்க முடியாத உண்மைகள். கல்வியறிவு இல்லாமை, செல்வச் சேர்க்கை, இவற்றால் உண்டான செருக்கு இவர்களிடம் உருவாக ‘இந்தியன்‘ என்றால் ஆணவம் கொண்டவன் என்று சாதாரண ஆப்பிரிக்கன் எண்ண ஆரம்பித்தான். விடுதலையும் வந்தது. ஆப்பிரிக்கர்களின் அடிமைத்தளை நீங்கி, அவர்கள் கொண்டாட, வெள்ளையர் ஏன் போனார்கள் என்று இந்திய வம்சாவழியினர் அங்கலாய்க்க ஆரம்பித்தனர். இதேநிலை இன்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ளது.

இன்றும் இந்தியர்களை இழிவாகக் குறிப்பிட ‘கூலி’ என்ற வார்த்தையை தென்னாப்பிரிக்காவில் ‘போயர்’ என்னும் வெள்ளைக் காரர் பயன்படுத்துவர். சில ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரத்தில் இந்திய வியாபாரிகளின் பாதிப்பு பலமானது. முதலில் உகாண் டாவை ஓபோட்டே ஆண்டபோது மேத்தா, மாத்வானி குடும்பங்கள் அந்நாட்டில் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தன. இதனால், ஏற்பட்ட வெறுப்பே இடிஅமீன் ஆட்சியில் இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து வெளியெற்றப்படுவதில் முடிந்தது. இன்றும் ஆப்பிரிக்கர்கள், கிழக்கு ஆப்பிரிக்க இந்தியர்களை, சுயநலமிகளாகப் பார்த்தாலும் அவர்களைத் தம் நாட்டின் தேவையான தீமைகளாக உணர்கின்றனர். பல ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை அடைய, இங்கு வாழ்ந்த இந்தியர்கள் மேலைநாடுகளில் குடியேற ஆரம்பித்தனர். இவர்கள் இந்தியாவிற்குத் திரும்புவதை நினைத்துக்கூடப் பார்க்காதது, மேலைநாடுகளில் வாழ்வதே நல்வாழ்வின் உச்சநிலை என்ற திடமான நம்பிக்கையினால்தான். இங்கிலாந்து சென்ற கிழக்கு ஆப்பிரிக்க இந்தியர்கள் ‘நீங்கள் அன்று அங்கு இருந்ததால், இன்று நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று உரிமை கொண்டாடி குடியுரிமைக்கு வாதிட்டனர். பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றதால், இவர்களுக்குக் கௌரவ வெள்ளைக்காரர் அந்தஸ்து ஒன்றும் கிட்டுவதில்லை. இவர்கள் குடியேறியபோது எதிர்கொண்ட பிரச்சினைகள், மேலை நாடுகளில், குடியேறும் எந்த இந்தியருக்கும் ஏற்படும் பிரச்சினைகளே.

இந்தியாவில் இருந்து மேலைநாடுகள் செல்லும் இந்தியர்கள், வேறுவிதமான ரகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில், உயர்கல்விக் கென அயல்நாடு செல்லும் ஆர்வமிக்க இளைஞர்கள், ஒருவகை. நம்நாட்டுக் கல்லூரிகள் தொழில்நுட்பத்தில் மேம்பட்டது, ஆனாலும் அக்கரைக் கலாசாலைகள் தரும் உதவிச்சம்பளம் கணிசமானது என்பதாலும், இங்கில்லாத ஆராய்ச்சி உபகரணங்கள் அங்கிருப்பதா லும், அங்குச் செல்வோர் பலர். தேவைக்கு அதிகமான பட்டதாரி களை இங்குள்ள கலாசாலைகள் உருவாக்கி வேலையில்லாதத் திண்டாட்டத்தினைத் தோற்றுவிக்குங்கால், தம் எதிர்காலம் இருண்டு விடாமல் இருக்க அக்கரை செல்வது சிலருக்கு வாழ்வு என்பது மரணப்பிரச்சினை போல உள்ளது. மேலைநாடுகள் சென்று பயின்று சாதனைகள் படைத்த அறிவியலாளர்களின் பட்டியல் ஒன்று போடலாம். நோபல் பரிசு பெற்ற நார்லிகர், சந்திரசேகர், அமர்த்யா சென் முதலியோர் இந்தியர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்கள். நம் நாட்டில் ஏற்படும் அறிவுத்திறன் இழப்பு பற்றிப் பேசும் சிந்தனைக்குதிர்கள், இதுபற்றி உண்மையாகவே அக்கறை இருந்தால் அறிவுத்திறனை மக்கவைக்கும் வேலை நிலவரத்தை மாற்றவும், வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும் ஆக்கப்பூர்வமான திட்டங்களைப் பிறப்பிக்க வேண்டும். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அக்கரைபோன 120 லட்சம் இந்தியர்களில் அநேகர், அந்நாடுகளில் குடியேறி குடியுரிமை பெற்றவர்கள். இந்தியாவின் அறிவுத்திறனிழப்பு மேலைநாடுகளின் ஆதாயம். ஒரு கணிப்பின்படி அமெரிக்காவில் மட்டும் கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் குடியேறி உள்ளனர். உயர் கல்வித்தகுதிகள் கொண்ட இவர்கள், தம் அறிவு கடின உழைப்பு இவற்றை மூலதனமாக வைத்துப் பணியாற்றி, வளமான வருமானம், வாகனம், வீடு என்று இந்தியாவில் வாழ்ந்ததைவிட வசதிகளுடன் வாழ்கின்றனர். இதே சமயத்தில், அந்நாடுகளில் குடியுரிமை பெற்ற இந்திய நிபுணர்கள் பெறும் வசதிகள், இதே தகுதிகள் கொண்ட வெள்ளைக்காரர் பெறும் வசதிகளைவிடக் குறைவானவையே. வேலைவாய்ப்புகள், இனவேறுபாடின்றி அளிக்கப்படும் என விளம்பரப்படுத்திக்கொள்ளும் நிறுவனங்களிலும், இந்தியர் ஒருவரும், வெள்ளையர் ஒருவரும் விண்ணப்பித்தால், இந்தியர் நாசூக்காக ஒதுக்கப்படுவதுண்டு. இதற்கு அந்நிறுவனங்கள் சொல்லாத காரணம், ‘வெள்ளைத் தோல்’ என்னும் முக்கியமான தகுதி இந்தியருக்கு இல்லாதது என்பது.

இனப்பிரச்சனை ஒருபுறமிருக்க அக்கரைவாழ் இந்தியர்கள் எதிர் நோக்கும் பெரும்பிரச்சினை கலாச்சார அதிர்ச்சி. இந்தியாவில் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்து, கிராமத்துப் பள்ளியில் ஆரம்பித்து, ஒரு நாட்டுப்புறக் கல்லூரியில் பயின்று, இங்கிலாந்தில் குடியேறி பூஜை, புனஸ்காரம் செய்து வாழும், தமிழர் ஒருவர் என்னதான் உபதேசித்தாலும், அவரை ஒரு தொல்லையாக, இங்கிலாந்தில் வாழும், வளரும் அவரது வாலிபப்பிள்ளைகள் நினைத்தால் அதற்கு வெள்ளைக் கலாச்சாரத்தின் பாதிப்பு, சகவாலிபர்களின் அபிப்பிராய அங்கீகாரம் முதலியன காரணங்கள் ஆகும். இவை வெளிநாட்டில், வாழும் குடும்பங்களில் சந்ததி இடைவெளியையும் சில சமயங்களில் பிளவையும் ஏற்படுத்துகின்றன.

இதுபோலவே அங்கு பணிபுரியச் செல்லும் இந்திய மனைவியும், பழைய பாரத நாரீமணியின் வார்ப்பிலிருந்து வெகுவாய் மாறுபட்ட வள். விவாகரத்து பற்றி இங்கு பேசக்கூடத் தயங்கிய அபிப்ராய பேதங்கள் கொண்ட தம்பதியினர், மேற்கூறிய சூழ்நிலையில் வாழும் போது, விவாகரத்து செய்தால் என்ன? எனச் சிந்திக்க ஆரம்பிப்பது, வெள்ளைக் கலாச்சாரத்தின் பாதிப்பாகும். இதனாலேயே அக்கரை யில் வாழ்ந்தாலும், இந்திய விவாகத்தின் உறுதியை நாடி இக்கரை வந்து துணைதேடும் பழக்கம் ஏற்பட்டது. இது இந்திய விவாகத்தின் உறுதியை நாடுபவர்களின் முயற்சி மட்டுமின்றி, அக்கரை பச்சையென நினைக்கும் இக்கரைவாழ் இந்தியர்களின் அயல்நாட்டு மோகத்தை கல்யாணச் சந்தையில் உபயோகிப்பவர்களின் முயற்சியும் ஆகும்.

மேலைநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் நிலையை விட முன்னேறும் நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் நிலை வெகுவாக மாறுபட்டது. வளரும் மூன்றாம் உலகநாடுகளான சூடான், சாம்பியா, தன்சனீயா, யுகாண்டா முதலிய நாடுகள் இந்திய அரசை வேண்ட, இங்கு அயல்நாட்டு வேலைவாய்ப்புகளைக் கவனிக்கும் இலாகா (எப்.ஏ.எஸ்) தங்கள் பட்டியலிலுள்ள நிபுணர்களின் பெயர்களைத் தந்துவிட, இந்திய அரசின் ஆசீர்வாதத்துடன், மருத்துவர்கள், பொறியிய லாளர்கள், கணக்கர்கள், ஆசிரியர்கள் முதலியோர் இந்நாடுகளுக்குச் செல்கின்றனர். இந்த வகையில்தான் அடியேனும் உலகத்திலே ஏழ்மைமிகு நாடுகளில் ஒன்றான தன்சீனியாவிற்கு சென்று அந் நாட்டின் அரசுக்காகப் பணியாற்ற ஆரம்பித்தேன். சிலர், இங்குள்ள நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்தும் வேலை பெறுகின்றனர், பொதுவாகப் பலர் அந்தந்த அரசு அமைப்புகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் ஊதியம், இந்தியாவில் கிடைத்ததைவிடச் சற்றே கூடுதல் ஆனாலும் முன்பு வெள்ளைக்காரர் இதே நாட்டில் பெற்ற ஊதியம் அல்லது இதே தகுதியுள்ள இந்திய நிபுணர் ஒருவர் சர்வதேச நிறுவனம் ஒன்றில் இதே நாட்டில் பணிசெய்து பெறும் ஊதியம் இவற்றுடன் ஒப்பிட்டால், ஏணி வைத்தாலும் எட்டாது. அந்நாட்டு அரசுகள், இந்தியத் தொழில்நுட்பம், (இது மேலைநாட்டுத் தொழில் நுட்பத்திற்கு எள்ளளவும் குறைந்தது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவும்) மலிவான விலையில் கிடைக்கும் என்பதை அறிந்ததும், நம்மவர்கள் அக்கரை செல்லும் வேகத்தில், அல்லது மோகத்தில், ஒப்பந்தங்களை ஓரக்கண்ணால் படித்துவிட்டு அயல்நாடு சென்ற பின்னரே அந்த ஒப்பந்தத்தின் நிர்பந்தங்களை சந்திப்பதும் காரணங்கள் ஆகும்.

இந்தியா மற்றும் இதர நாடுகளில் படித்துவிட்டு, முதுகலைப் பட்டங்கள் பெற்று பத்து, இருபது ஆண்டுகள் வேலைசெய்துவிட்டு, திறமையுள்ள இந்தியர்கள், முன்னேறும் நாடுகளில் சர்வதேச நிறுவனங் களுக்காகப் பணிபுரிய வருகையில், அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகளில் இருந்துவரும் இளம் பட்டதாரிகள், இதே மட்டத்தில் பணிபுரிய வருவதுண்டு. இதற்கு இந்திய நிபுணர்களின் திறமைக்குறைவு காரணமல்ல. மேலைநாடுகள் சர்வதேச நிறுவனங்களுக்குத் தரும் பணம் அதிகம் என்பதால் வெள்ளையர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் என்பது முதல் காரணம். இரண்டாவது இந்த சந்நிதானங்களில், நுழைய என்ன தெரியும் என்பதைவிட, எவரைத்தெரியும் என்பதும் முக்கியம்.

பல முன்னேறும் நாடுகளில், அன்றாட வாழ்க்கை, பிரச்சினைகள் நிறைந்தது. தலையாய பிரச்சினை, சேமிக்கும் சிறிதளவு பணத்தையும் அந்தந்த நாடுகளில் உள்ள அந்நியச்செலாவணி நெருக்கடியால், இந்தியாவுக்கு அனுப்புவது கடினமானதாகவோ, சில சமயங்களில் இயலாததாகவும் ஆகிவிடுவது. அத்யாவசியப் பொருட்களின் கட்டுப் பாடு, மருத்துவ வசதிகள் இல்லாமை, அவ்வப்போது நடக்கும் உள்நாட்டுக் கலவரம், வழிப்பறி, கற்பழிப்பு, கொள்ளை, களவு, ஆயுதப்புரட்சி போர், இவற்றில் வம்பாக மாட்டிக்கொள்வது அக்கரை வாழ் இந்தியர்களின் விதி. இவர்களில் பல்லைக் கடித்துக்கொண்டு ஆண்டுகளைக் கழித்துவிட்டு ஒப்பந்த இறுதியில் இந்தியா திரும்பி பெருமூச்சு விடுபவர் சிலர். ஒப்பந்தங்களை முறித்துவிட்டு தாய்நாடு அல்லது வேறொரு நாடு செல்பவர் சிலர்.

இந்தியாவில் வேலை, சேவை செய்ய வாய்ப்பு இருந்தும், தேவையான வசதிகள் இருந்தும், வெளிநாடு செல்வோரின் துடிப்பு விரும்பத் தக்கதல்ல. இந்த வகையில், அரபுநாடு செல்லும் இந்திய மருத்துவர் களை நம் நாட்டில் பட்டிதொட்டிகளில் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறும் வறியவர்கள்தான் மன்னிக்க வேண்டும். மருத்துவர்கள் என்றால் விதிவிலக்குகள் உண்டு. சியராலியோனில், (மேற்கு ஆப்பிரிக்கா) லாக்கா என்னும் குக்கிராமத்தில், சவக்கிடங்கு ஒன்றை மருத்துவமனையாக்கி தொழுநோயாளிகளைப் பேணிக்கொண்டிருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ரங்கராஜ் என்பவரைச் சந்தித்திருக்கிறேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று கரிகிரியில் தொழுநோய் மருத்துவமனையில் பயிற்சி பெற்று, ஆப்பிரிக்கா சென்று சாலைகள் இல்லாத பகுதிகளிலும், காடுகளில் உள்ள குக்கிராமங்களிலும் சென்று தொழுநோயாளிகளைக் கண்டு மருத்துவம் செய்யும் இவர் பணிக்குத் தேசம், இனம் என்ற எல்லைகள் கிடையாது. இவ்வாறு பல ஆண்டுகள் பணிசெய்யும் ஆங்கிலேயர் களுக்கு பிரிட்டிஷ் அரசு ஓ.பி.இ. (ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்) விருது கொடுக்கும், ஆனால் இந்தியாவுக்கு அக்கரைவாழ் இந்தியர்களின் பணிபற்றி ஒன்றும் தெரியாது. ஒருவேளை ரங்கராஜ னுக்கு ‘டோமியன் டட்டன்’ விருது கிட்டினால், அப்போது அவரை நம் நாடு சொந்தம் கொண்டாடும். சாம்பியாவுக்கு எழுபதுகளில் வந்து இன்றுவரை, முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட, ஹெச்.ஐ.வி யால் பீடிக்கப்பட்ட சிறுவர்களைப் பேணி, அவர்கள் வாழும் எஞ்சிய காலத்தையும் இயன்ற அளவு ஆரோக்கியமாகக் கழிக்க பணியாற்றும், சிறுவர்நல மருத்துவர் கணபதிபட், மற்றொரு எடுத்துக்காட்டு. சாம்பியாவில் சிங்கங்கள் திரியும் சிச்சிலி என்னும் வனப்பகுதியில் மிக எளிமையான வசதிகளுடன் வாழ்ந்து அங்குள்ள மருத்துவமனையிலும், பள்ளியிலும் பணிபுரியும் கோவை பிரசென் டேஷன் கான்வென்ட்டைச் சேர்ந்த கத்தோலிக்க கன்யாஸ்திரிகள் பொதுநலச் சேவையின் மொத்த உருவங்கள். இவர்களைப் போல் சேவை உணர்வுடன் செல்வோரை விரல்விட்டு எண்ணலாம். இங்குதான் அயல்நாடு செல்பவர்களை அவர்களுடைய நோக்கத்தின் அடிப்படையில் பிரிப்பது அவசியம் ஆகிறது. சேவை உணர்வு உள்ளவர், கூலிக்கு மாரடிப்பவர், இந்தியச் சூழ்நிலைக்கு அஞ்சியவர், அக்கரை மோகம் கொண்டவர், பொற்களஞ்சியம் தேடும் பேராசைக் காரர், வறுமைக்கோடு தாண்ட நினைப்பவர் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

முன்னேறும் நாடுகளில் பணியாற்ற அலங்காநல்லூர், விளாத்திக் குளம், குடியாத்தம் என்று பல சிற்றூர்களிருந்து இங்குவாழ வருபவர் களில் சிலர் வரும்போது சிற்றூர் சில்லறைத்தனத்தையும் பத்திரமாக மூட்டை கட்டிக்கொண்டு வந்து, இங்கும் ஒரு சிற்றூர் சூழலை உருவாக்குவர். இந்தக்கூட்டம் அந்தஸ்து, அதாவது எந்த நிறுவனத்தில் வேலை செய்பவர், எந்த வகை வாகனம் ஓட்டுபவர் என்பதைப் பொறுத்து கலந்துறவாடும். இவர்கள் பொதுவாக தாம் வாழவந்த நாட்டின் கவலைகள், அக்கறைகள், பிரச்சினைகள் ஆகியனவற்றை பற்றி யோசித்துக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். பொதுவாக நம்மவர் அயல்நாடு செல்கையில் அங்கு வாழும் இந்தியர், வெளிநாட்டவர் பற்றி நல்லதையும், பெரும்பாலும் கெட்டதையும் இலவச உபதேசமாக அளிப்பது வழக்கம். நான் கேட்டவைகளில் சில: “சீனாக்காரனை நம்பாதே, சிரித்துப் பேசி கழுத்தை அறுத்துவிடுவான்.” “அரேபியர்கள் ஈவு இரக்கமின்றி இருப்பவர்கள், சோம்பேறிகள் . . .” “பர்மியர்கள் கெடுபுத்திக்காரர்கள் . . .” “இங்கிலீஷ்காரர்கள் தங்கள் முட்டாள்தனத்தில் பெருமை அடைபவர் கள் . . .” “ஆஸ்திரேலியா வெள்ளையர் நாடு, நீ எவ்வளவு பெரியவன் ஆனாலும் உன்னைக் கருப்பு . . . என்று அழைத்தால் திகைத்து விடாதே . . .” “ஆப்பிரிக்கர்கள் மறுநாள் பற்றி நினைப்பதில்லை, குடித்துக் கும்மாளம் போடுவது இவர்கள் வழக்கம் . . .”

நான் நானாக இருப்பதில், இந்தியனாக தமிழனாக இருப்பதில் பெருமை கொண்டவன். ஆனாலும் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியநேர்ந்தபோது சில சமயங் களில் தலைகுனிய நேர்ந்தது. ஆப்பிரிக்காவில் கடவுள் மனிதனைப் படைத்தது பற்றிய கதை ஒன்று உண்டு. ஆப்பிரிக்கர், இந்தியர், வெள்ளைக்காரர் என்னும் மூன்று இனங்களைப் படைத்தவுடன் மூளை, காசு, கொட்டு ஆகிய மூன்றையும் முன்வைத்து, ஒவ்வொரு வரையும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்ளச் சொல்ல, இந்தியர் முதலில் காசையும், வெள்ளைக்காரர் மூளையையும், ஆப்பிரிக்கர் கொட்டையும் எடுத்துக்கொண்டார். இந்தக் கதையை என்னிடம் சிரித்தவாறே சொன்ன என் ஆப்பிரிக்க நண்பர், “அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் கொட்டடித்துக்கொண்டே இருக்கிறோம் . . .” என்று கூறி, தாம் இந்த மூன்று இனங்கள் பற்றி என்ன நினைக்கிறார் கள் என்பதைச் சுருக்கமாகக் சொன்னார். இந்தியர் என்றால் ‘பணப் பேய்கள்’ என்ற அபிப்ராயம் உருவானதற்குப் புண்ணியம் கட்டிக் கொண்டவர்கள் இந்திய வணிகர்கள். ஒருமுறை ஸ்கிபோல் (ஆம்ஸ் டர்டாம்) விமான நிலையத்தில், கூட்டத்திலிருந்து என்னைத் தனித்து வரச்சொல்ல, பெட்டியைச் சோதனையிட்டவரிடம் எரிச்சலுடன், இத்தனை பேர் செல்ல என்னை மட்டும் ஏன் பிரித்து எடுத்தீர்? என வினவ, ‘நீர் சூரினாம்’ (டச்சு கயானா) நாட்டில் இருந்து வந்த இந்தியர் போலத் தோன்றினீர். எனவே போதைப்பொருட்கள் உங்கள் பெட்டியில் இருக்கின்றனவா எனத் தேடினேன்; தேடுவது என் கடமை, என முகம் மாறாமல் பதில் அளித்தார். சிங்கப்பூரில் ஒருமுறை தமிழர் கடை ஒன்றில், நூறு டாலர் நோட்டைக் கொடுக்க, அவர் அதைத் திருப்பி திருப்பிப் பார்த்தார். நான் பொறுமையிழந்து, “என்ன நீர் நம்மவர் ஆனாலும், நம்மையே சந்தேகிக்கிறீர்களே” என்று சொல்ல “ஐயா கோபித்துக்கொள்ளதீர்கள், நம்மவர்கள்தான் அதிகமாக ஏமாற்றுகிறார்கள்” என்று அவர் பதில் அளித்தபோது கடாரம் வென்ற, சாவகம் வென்ற தமிழ்ச்சாதியை நினைத்துக் கொண்டேன். இந்தியர்களை புத்திசாலிகள், கடின உழைப்பை மேற்கொள்ளுவார்கள், எந்தவிதச் சூழ்நிலையையும் பொறுத்துக் கொள்ளுவார்கள் என்பது போன்ற அபிப்ராயங்களை உருவாக்கியவர் களுக்கு, சிலவற்றில் கெட்ட பெயரும் உண்டு.

இந்தியாவிற்கு அத்தியாவசியமான அந்நியச்செலவாணியை தம் உழைப்பின் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரும் அக்கரைவாழ் இந்தியர்கள், இக்கரை வருகையில், ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு கடத்தல்காரனுக்குள்ள குணாம்சங்கள் தன்னையும் அறியாமல் ஏற்பட்டு இருக்குமோ என்ற ஐயம் உருவானால் அதற்குச் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘ஓகோ’ இவர்கள் வெளிநாட்டில் சுகபோகத்தில் திளைத்தவர்களாக்கும், என்பது போன்ற காழ்ப்புணர்வு இவர்களிடம் இருப்பதை சில சமயங்களில் காணலாம். சில இந்தியத் தூதரகங்களிலும் இந்தப் போக்கை காணலாம். எண்ணிக்கையில் அதிகமான இந்தியர்கள், அக்கரையில் வாழும்போது பாரதத் தாயின் அநாதைக் குழந்தைகள் ஆகவும் நடத்தப்படுவதுண்டு. மக்கள் பெருக்கத்திலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும், உழன்று அக்கரை செல்லும் இந்தியர்கள், போட வேண்டிய எதிர்நீச்சல், கடைசியில் எல்லாம் சுபமாக முடிந்தது எனக்கூறக் கூடிய கதையல்ல. வெளிநாடு சென்றவரெல்லாம் சுகபோகத்தில் திளைப்பதாக எண்ணுவோருக்கு அது மலர்ப்படுக்கை அல்ல என்பதை எடுத்துக்கூற வேண்டிய அவசியம் உள்ளது. இந் நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் வெளிநாடு சென்ற பலர் அவர்கள் உழைப்பின் பலனாகப் பெற்ற செல்வத்தையும், இதர வசதிகளையும், பற்றி மட்டும் பேசிவிட்டு அதற்காக அவர்கள் எவ்வாறு, எப்படியெல்லாம் பாடுபட்டவர்கள் என்பதைக் கூறாமல் விடுவதாகும். வசதி என்னும் புணுகை தடவுவதால், இன்னல் என்ற புண்ணே இல்லை என்ற நிலைவந்துவிட்டது.

பல ஆண்டுகள் அக்கரையில் வாழ்ந்துவிட்டு மறுபடியும் இந்தியா வந்து வாழ ஆரம்பிக்கையில், அக்கரைவாழ் இந்தியர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அக்கரையில், வேறுவிதமான வேலைநிலை, வாழ்க்கைமுறை, மனப்பான்மை, ஆகியவற்றிற்குப் பழக்கப்பட்டவர்கள், அதன்பின் மறுபடியும் இந்தியச் சூழ்நிலையில் புகுவது, நிலைகொள்வது தட்டுத்தடங்கலின்றி நடக்கும் காரியமல்ல. பல ஆண்டுகள் அக்கரை வாழ்ந்தது மட்டுமல்ல காரணம். கடந்த ஆண்டுகளில், இந்தியாவும் வெகுவான மாற்றங்களுக்கு உட்பட்டதும் காரணமாகும். எடுத்துக்காட்டாக அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் காணப்படும் அடுத்தவரைப் பற்றிய அக்கறையற்ற அசுரகதியில் இயங்கும் போக்கு இங்கும் வந்துவிட்டது.

சேமிப்பு அதிகம் இல்லாத சில அக்கரைவாழ் இந்தியர்களுக்கு தாய்நாடு வந்து வாழ்க்கையை ஆரம்பிப்பது புனர்வாழ்வுத் திட்ட மாகிவிடுகிறது. அக்கரையில் உள்ள போதைப்பொருட்களின் பயன்பாடு, ஆண்பெண் உறவு இவை பற்றி இக்கரை வாழ்வோர் கொண்டுள்ள ஒருதலைப்பட்சமான அபிப்ராயங்களும் கலந்துற வாடலுக்குப் பங்கம் விளைவிப்பன. அயல்நாடுகளில் வளர்ந்த இந்திய வாலிபர்கள், இங்கு வருகையில் அவர்கள் நம்மவர் சிலரால் தீண்டப்படாதவர்கள் போல நடத்தப்படுவதற்குக் காரணம், நாங்கள் உங்களைவிடப் பரிசுத்தமானவர்கள் என்னும் மனப்பான்மையே! இங்குள்ளவர்களிடம் மேற்கூறிய தீய பழக்கங்கள் எக்கரையிலும் காணப்படும் சமூகப்பிணி. அது வெகுசிலரையே பீடிக்கும் என்பதைச் சொல்லி ஓயவில்லை. அக்கரை சென்றவர்கள், இக்கரையில் இருந்து சென்றவர்கள்தான். அவர்களுக்கு அக்கரையின் பாதிப்புகள் இருந்தாலும் அடிப்படை சமூக நோக்குகள், மனப்பான்மை, சம்பிரதாயங்கள் (நல்லவையும், கெட்டவையும்) அதிகமாக மாறுவதில்லை. அக்கரைவாழ் இந்தியர்கள் எக்கரையில் வாழ்ந்தாலும் மனத்தளவில், உந்திக்கொடி அறுபடாத அன்னை பாரதத்தின் அருந்தவப்புதல்வர்களே.


2 comments:

Anonymous said...

NALLA THARAMANA AYVUKALAI ULLADAKKIYA PUTTHAKATTHAI KASUK KODUTTHU VAANGIP PADIKKA MUDIVU SEYTHULLEN.....
www.islamiaulagam.blogspot.com

ஹிஷாலி said...

nice